வாழ்த்துச்செய்தி
ஆன்மீக ததும்பும் ஆத்ம துளிகள் என்ற இக்கவிதைத் தொகுப்பை யாத்து எமக்களித்திருப்பவர் திருகோணமலை பழங்குடிச் சைவப் பரம்பரையில் வந்துதித்த திருமதி ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜாவார். இவர் இம்மண்ணில் சைவமும் தமிழும் தழைத்தோங்க சேவை செய்த ஒரு பக்திப் பரம்பரையைச் சேர்ந்த திரு.சந்திரசேகரப்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் புதல்வியாவார்.
இவரது உடன்பிறப்புக்களும் இன்று இம்மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல சமய இலக்கியப் பணிகளை செய்து வருகின்றனர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இறைவனடி சேர்ந்த இவரது துணைவரும் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றி ஒரு காலத்தில் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சிவபாலன் அவர்களின் புதல்வனாவார்.
இக்கவிதைத் தொகுதியில் ஆசிரியரின் சுயவரலாற்றைப் படிக்கும் போது தன்னடக்கமாக இவர் பல உள்ளார்த்தமான கருத்துக்களை ஒழுவு மறைவின்றி எம்முடன் பகிர்ந்து கொள்வது இவரது கள்ளம் கபடமற்ற உள்ளப் பண்பைக் கூறுகிறது.
இக் கவிதைகள் நூல் உருவில் வர தன் புதல்வன் தான் காரணம் எனறும் கவிதைகள் எழுதுவது என் பொழுது போக்கு ஆனால் அவை மேடைக்கு வந்ததில்லை. முளைத்து வரும் வேளையிலேயே கருகிச் சருகாகிவிடும் அதைப் படிப்பாரும் இல்லை.எனக்கு உற்சாகம் தருவாரும் இல்லை. என்று வெளிப்படையாகவே இவர்கூருவதைப் படிக்கும் போது இவரது உள்ளத்தின் ஆதங்கம் எமக்கு நன்றாகப் புரிகிறது. அத்துடன் இப்படி எத்தனை எழுத்தாளர்கள். கவிஞர்கள் தமது ஆக்கங்களை வெளிகொணர முடியாத நிலையில் அப்படியே மறைந்து போய் விடுகிறார்கள் என்பதையும் எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அடுத்து சமர்ப்பணம் என்ற தலைப்புப் பற்றியது.ஓரு எழுத்தாளன் ஒரு நூலை வெளியிடும் போது எத்தனை விடயங்களைப் பற்றிச் சிந்தித்து தலையுடைக்க வேண்டியுள்ளது என்பது ஆசிரியை வாயிலாக நிதர்சனமாகக் காட்டப்படுகிறது.
இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பதை அவர் வாயிலாகவே கேட்போம். இதை யாருக்குச் சமர்ப்பணம் செய்வது குரு,தாய்,தந்தை,பதி எனசிந்தித்து ஈற்றில் எனது பதிக்கே இதைச் சமர்ப்பிக்கிறார்.
இந்த கவிதை யாருக்குச் சமர்ப்பணம் என்றுயோசித்தேன். நால்வர் என் முன் வந்தனர். என் குருநாதர், என் தாய் தந்தை என் கணவர் சரி யோசிப்போம் என்று விட்டுவிட்டேன். ஒரு நாள் தியானத்தில் இருந்து எழும்போது யாருக்கு இக்கவிதை வந்தது. இது யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. என்று கவிதையைப் படித்துப் பாருங்கள், எனக் குறிப்பிடுகிறார்.
இக்கவிதைத் தொகுதி வெளியிடவதில் தன் மகனும் மகளும் பெரும் பங்காற்றனர் என்பதைக் படிக்கும் போது "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்" என்ற குறள் மனதில் ஒலிக்கிறது.
சுவாமி கெங்காதரானந்தா மீது இவர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பக்தியும்கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் பறைசாற்றும்.
திருகோணமலை மண்ணிற் பிறந்ததால் இங்குள்ள பல திருத்தலங்கள் மீதும் இவர் கவிதை இயற்றியுள்ளார்.குறிப்பாக திருக்கோணேசர் ஆலயம். ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் விலலூன்றிக்கந்தர் போன்றவற்றைக் கூறலாம்.
மனநிம்மதிக்கும் மனசாந்திக்கும் கைகொடுக்கக் கூடிய இக்கவிதைத் தொகுப்பு நிச்சயம் எம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.ஒரு ஆன்மீனவாதியின் அற்புதமான கவிதைகளை இழந்து விடாமல் அதற்கு உரம் போட்டு விருட்சமாக்கிய இவரது பிள்ளைகளையும் நாம் போற்ற வேண்டும். ஆன்மீக என்றால் என்ன என்று கேட்கும் இக்காலப் பரம்பரையினர் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலப்பரம்பரையினரிடம் இவரது வழித்தோன்றல்கள் இந்த அரும்பணிக்கு உதவியமை போற்றப்பட வேண்டும்.
நூறு கவிதைகளைக் கொண்ட இத்தொகுதி படிப்பதற்கு மனச்சாந்தியைத் தரவல்லதுஎனக் கூறி ஆசிரியை இன்னும் பல கவிதைகளை எழுதி வெளியிடவேண்டும் என வாழ்த்தி இக்காலகட்டத்தில் இத்தொகுதி மிகவும் பொருத்தமானது எனபதையும் வெளிப்படுத்தி அமைக்கிறேன்.
வாழ்க இவரது பணி
கலாபூஷணம்
பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்