அத்தியாம் - 1
தாலாட்டு மற்றும் பாடல்களும் விளக்கமும்
ஆர் ஆர் ஆரிவரோ
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
பொன்னே உறங்கம்மா
பூமகளே கண் உறங்கு
சிவனருளால் வந்து உதித்த
செல்வமே கண் உறங்கு
ஆழ் கடலில் கண்டு எடுத்த
ஆணி முத்தும் நீ தானே
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
தங்கத்தால் தொட்டில் கட்டி
வைரத்தால் பூ இழைத்து
தொட்டிலில் போட்டு உன்னை
நிம்மதியாய் உறங்க வைப்பேன்
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
மற்றொன்று இப்படியும் உள்ளது
ஆர் ஆர் ஆரிவரோ
கண்மணியே கண் உறங்கு
யார் அடித்து நீ அழுதாய்
அடித்தாரை சொல்லி அழு
அப்பா உன்னை அடித்தாரோ
அனைத்து எடுக்கும் கையாலே
மாமன் உன்னை அடித்தாரோ
மரம்பிஞ்சுத் தடியாலே
அத்தை உன்னை அடித்தாரோ
அலரி பூ செண்டாலே
ஏன் அழறாய் என் மகளே
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
பாலுக்கு நீ அழுதாயோ
பசியாற குடித்து விடு
ஏன் அழுதாய் என் மகளே
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
அப்பாவின் தோள் மேலும்
அம்மாவின் மடி மேலும்
கண்ணே உறங்கம்மா
கண்மணியே கண் உறங்கு
இவை இரண்டும் தாலாட்டு பாடல்கள்.இந்த பாடல் குழந்தை பூமியில் பிறந்து சில நாட்களின் பின் தாயாராலோ பேத்தியாராலோ (பாட்டி)பாடப்படுகிறது.பாட்டை கவனமாக பாருங்கள். ஆர் ஆர் ஆரிவரோ என்றே தொடங்கப்படுகிறது.குழந்தை ஆணாக இருந்தால் கண்ணா,ஐயா என்றோ, பெண்ணாக இருந்தால் கண்ணே அ்அம்மா என்றோ பாடுவார்கள். இந்த பாட்டு தொடங்கபடும் வார்த்தையில் பாரிய அர்த்தம் உள்ளது. தமிழ் மக்கள் பிறவிகளை நம்புபவர்கள். தாயார் பாமரப் பெண்ணாயிருந்தாலும் சரி, படித்த பெண்ணாயிருந்தாலும் சரி பிறந்த பிள்ளையை தாலாட்டு பாடித்தூங்க வைக்கும் போது ஆர் ஆராரோ ஆரிவரோ என்று சொல்லியே பாட்டைத் தொடங்குவாள்.
அவளுக்கு அதன் அர்த்தமே புரிந்து இருக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த தாயானவள் மாபெரும் பாடத்தைத் தன் குழந்தைச் செல்வத்திற்கு சொல்லி கொடுக்கிறாள். யார் யாரோ? யார் இவரோ? என்று இரு கேள்விகளையும் குழந்தையைக் கையில் எடுத்து கேட்கிறாள்.பக்கத்தில் இருப்பவருக்கும் பதில் தெரியாது. கடவுளுக்குதான் தெரிந்திருக்கும்.
எனவே கையில் எடுத்தவுடன் கடவுளிடம் கேட்டு அதனைத் தன் கணமணி ஆக்கி கொள்கிறாள் . குழந்தையிடம்’ நிம்மதியாய் கண் உறங்கு’ என்று இனிய குரலில் மென்மையாக பாடுகிறாள்.குழந்தை தாயின் அரவனைப்போடு குரலோசையும் சேர்ந்து கொள்ள நிம்மதியாய் நித்திரை செய்யப்பார்க்கின்றது. முதல் பாட்டில் குழந்தையை தாலாட்டும் விதம் பாருங்கள்! உயர்வு நவர்ச்சி அணியால் போற்றுவதை!! ‘பொன்னே உறங்கம்மா, பூமகளே நீ உறங்கு’ என்று பாடும் பொழுது,பொன்னை ஒத்தவளே பூவை ஒத்த மகளே என்று கூறுவதை, அடுத்த வரியில் சிவனருளாள் வந்த செல்வமே எனக் கூறி சிவனிடம் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறாள்.இந்த நன்றி தெரிவிக்கும் பண்பு தமிழரிடம் பாரம்பரியமாய் உள்ள பண்பாகும்.
தைப்பொங்கல் தினத்தன்று விநாயகர் சூரியன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் பொங்கி படைத்து விழாக் கொண்டாடுவார்கள். நவராத்திரி விழா எடுத்து முப்பெரும் தேவிகளுக்கு கல்வி செல்வம் வீரம் தந்ததிற்காய் நன்றி தெரிவிப்பர்.அதே போன்று தலாட்டு பாடும் பொழுதும் சிவனருளால் வந்த செல்வம் என்று கூறி நன்றியை தெரிவிக்கிறாள். அதன் பின் அவள் கற்பனை விரிவடைகிறது. ஆழ்கடலில் கண்டு எடுத்த பழமை பொருந்திய முத்தோ என்கிறாள். உனக்கு தங்கத்தால் தொட்டில் கட்டி அதில் வைரப்பூ இழைத்து ,உன்னை தொட்டிலில் இட்டு உறங்க வைப்பேன் என்று தன் செல்வச் செழுமைகளை கூறுகிறாள் .இவற்றை ஒரு செல்வசீமாட்டி சொல்லி உறங்க வைக்க, இன்னொரு பாசமிகு மங்கை தன் உறவுகளை சொல்லி உறங்க வைக்கிறாள். எப்படி என்று பார்ப்போமா?
இந்த்த் தாயார் ‘ ஆர் ஆர் ஆரிவரோ கண்மணியே கண் உறங்கு’ என்று பாடி விட்டு யார் அடித்து நீ அழறாய். அடித்தாரைச் சொல்லியழு என்று பாடிக் கேட்கிறாள். அ்அப்பா அடித்து விட்டாரா அணைத்தெடுக்கும் கையாலே என்று கேட்டுப் பின் மாமன் அடித்தாரோ மாப் பிஞ்சுத்தடியாலே என்று கேட்கிறாள் . தனது அருமை அண்ணன் உனது மாமன் உன்னை அடித்துவிட்டாரோ? அவர் அடித்தது பிஞ்சுத்தடி தான் என்று தன் செல்வத்திற்கு மறைமுகமாய், அது மெல்லிய தடி என்பதால் உனக்கு அது நோகாது.ஆகவே கவலைபடாதே என்பதை’ மாம்பிஞ்சுத்தடி’ என்று கூறுவதில் இருந்தே குழந்தையை புரிந்து கொள்ள வைக்கிறாள். அ்அத்தை உனக்கு அலரிப்பூச் செண்டாலே தானே அடித்தா உனக்கு வருத்தம் தராது.இவர்கள் உன்னை திருத்தி நடத்த உரிமை உள்ள உறவுகள் என்பதைப் புரிய வைக்கிறாள்.
பின்பு குழந்தை பசித்து அழுதோ என எண்ணிப் பாடிக் கேட்கிறாள்.பசியாற பாலைக்குடி என்று சொல்வதோடு உன் அப்பாவின் தோள் மேலும் அம்மாவின் மடி மேலும் நித்திரை கொள். அப்பாவின் தோள் உனக்கே சொந்தம். அதில் உன்னைச்சுமந்து செல்வார். உன் அம்மாவின் மடி உன்னுடைய இருப்பிடம். அவள் உன்னை ஏந்தி வைத்திருப்பார் என்று தமது கடமை உன்னை கண் எனக் கவனிப்பது என்று கூறாமல் கூறி அந்த சிசுவுக்கு நம்பிக்கையை வளர்க்கிறாள். இந்தப் பாடல் மூலம் தாய் தந்தை கடமை, மாமன் அத்தை கடமை என்று தமிழர் தம் கடமைகளை எவ்வண்ணம் செய்தனர் என்று வகுத்துக் காட்டுகிறார்கள்.
பாமர தாலாட்டு பாடல் மனித உணர்வினையே தொட்டுவிடுகறது.இதை வழி வழி பாடி வந்திருக்கிறார்கள் என்றால், தமிழர் மாட்சிமை தான் என்னே! குழந்தையும் தாலாட்டுப் பாடலில் கண் உறங்கு பாலுண்டு வளர்கிறது. இப்பாடலை இரண்டு வயது மூன்று வயது வரை படிப்பார்கள். குழந்தை பாடலைக் கேட்டவுடன் நித்திரை கொள்வதை வழக்கமாக்கி விடுவதால் தாலாட்டைப் பாடியே தூங்க வைத்து விடுவார்கள்.