Sunday, December 23, 2018

                                       

 அணிந்துரை
மக்களின் தூண்டுதலால் எழுதி 











ஆய்வுரை 
திருமதி ஞானமனோகரி ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் “குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்” என்ற இந்நூல் பாராட்டத்தக்க ஒரு நல்ல முயற்சியாகும். குழந்தைகள் தொடர்பான பாடல்களின் ஒரு தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
                      திருமதி ஞானமனோகரி ஶ்ரீஸ்கந்தராஜாஅவர்களை நீண்ட காலமாக நான் அறிவேன்.இவரது சகோதரன் திரு.ச.அருள்ஜோதிசந்திரன் அவர்கள் எனது பள்ளித்தோழன்.இவரது கணவர் திரு.ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களும் நானும் திருகோணமலை இந்துக்கல்லூரியில் சக ஆசிரியர்களாக  பணியாற்றி இருக்கின்றோம். இந்நூலாசிரியரது மகன் பவன் எனது மாணவராயிருந்தவர்.இவ்வாறாக நூலாசிரியரை நீண்ட காலமாகத் தெரிந்திருந்தும் இவரது கவித்துவத்தையும், இலக்கிய ஆளுமையையும் நான் தெரிந்திருக்கவில்லை.
             காலமும் சூழ்நிலைகளும் கூட நல்ல இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிவிடும் என்பதற்கு இவர் சான்றாகின்றார். உறங்கிக் கிடந்த உணர்வுகள் இப்பொழுது நல்ல ஆக்கங்களாக வெளிபடுகின்றன என்று நம்புகின்றேன். இந்நூலாசிரியரது முதலாவது படைப்பாக வெளிவந்த “ஆத்மதுளிகள்” என்ற கவிதை தொகுப்பு நூலை அண்மையில் தான் வாசிக்க முடிந்தது. அந்நூலின் வெளியீட்டுரையில் திரு.த.சித்தி அமரசிங்கம் அவர்கள் அந்நூலை ஒரு விசித்திரமான புதுமையான கவிதைநூல் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்று இந்நூலாசிரியர் தனது இரண்டாவது படைப்பாக வெளியிட்டிருக்கும் இந்த நூலுக்கும் கூட பொருத்தமாக அமைகிறது என்றும் கூறலாம்.
                     ஏனெனில் இது ஒரு புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது.குழந்தைகளுக்காக தாய்மாரால் பாடப்படும் பாடல்கள் பற்றி நாம் பெரிதும் அக்கறைப்பட்டுக்கொள்வதில்லை.அப்பாடல்களின் கவித்துவம், பொருள், பின்னணி பற்றி நாம் சிந்தித்திருக்கவில்லை.பிள்ளைகளைத்தூங்க வைப்பதற்காக தாய்மார்  ஏதோ முணுமுணுக்கின்றார்கள் என்றுதான் நினைத்திருந்தோம்.
                 ஆராரோ ஆரிவரோ,கண்மணியே கண் உறங்கு
                  யார் அடித்து நீ அழுதாய், அடித்தரை சொல்லி அழு                
                 அப்பா உனக்கு அடித்தாரோ, அணைத்தெடுக்கும் கையாலே
                 மாமன் உனக்கு அடித்தாரோ,மாம்பிஞ்சி தடியாலே
     என்று தாய்மார் பாடும் பொழுது அதன் ஓசை நயத்தை மாத்திரம் தான் நாம் ரசித்திருந்தோமே தவிர அதற்கப்பால் அப்பாடல்கள் பற்றி நாம் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.
                      ஆனால் அத்தகைய குழந்தைப் பாடல்களைத் தொகுத்து அப்பாடல்களின் நயம் பற்றியும், பின்னணி பற்றியும் கூறியிருப்பது ஒரு புதிய முயற்சியாகவும் , புதுமையானதாகவும் அமைகின்றது. இத்தகைய ஒரு தொகுப்பு முயற்சி தமிழிலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணம்மாக கொள்ளப்படவும் கூடும் .  நாட்டார் பாடல்கள் பற்றிய பல்வேறு தொகுப்பு நூல்களைக் கண்டிருக்கின்றோம். ஆயினும் குழந்தைகளுக்காக பாடக்கூடிய இத்தகைய பாடல்களின் தொகுப்பு வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி என்பதோடு , ஆவணமாக பேணக்கூடிய ஒரு தகுதியையும் இந்நூல் பெறுகின்றது.
                   இப்பாடல்களை தொட்டிலில் தாலாட்டும் பொழுது தாய்முகம் பார்த்து சிரிக்கும் பொழுது, உடம்பு பிரட்டும் பொழுது, எண்ணெய் பூசும் பொழுது , தவழும்  பொழுது , எழுந்து நிற்கும் பொழுது என்றவாறு குழந்தையின் வளர்ச்சிக்கு கிரமத்தோடு ஒட்டி நேர்த்தியாக தொகுக்கின்றார் ஆசிரியர். அத்துடன் இப்பாடல்களுக்கான பின்னணியையும், விளக்கங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.
               இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் ஆசிரியரால் இயற்றப்பட்டதல்ல. வீடுகளில் குழந்தைகளுக்காக தாய்மார்களால் வாய்மொழியாக காலங்காலமாக பாடப்பட்டு வந்த பாடல்களையே ஆசிரியர் தொகுத்துள்ளார். இவை நீண்ட பாடல்களுமல்ல. நான்கு வரிகளையோ அல்லது எட்டு வரிகளையோ கொண்டதான சிறிய பாடல்களாகத்தான் இவை உள்ளன. ஆயினும் இப்பாடல்கள் என்ன தேவைக்காக எந்தப்பின்னணியில் பாடப்படுகின்றன என்ற விளக்கத்தை சுவையாக ஆசிரியர் சொல்லுகின்றார். அநேகமான பாடல்களின் பின்னணியாக திருகோணமலை சமூகத்தை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கின்றார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணின் பாதிப்பே இது. அநேகமான சந்தர்ப்பங்களில் ஆன்மீகம் சார்ந்த விளக்கங்களையும் காண மமுடிகிறது.
         ஆசிரியர் இப்பாடல்களை குழந்தையின் வளர்ச்சிக்கிரமத்தோடு ஓட்டியதாக நேர்த்தியாகத் தொகுத்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும் . உதரணமாக தாலாட்டும் போது, தாய்முகம் பார்த்து  சிரிக்கும் போது, உடம்பு புரட்டும் போதும், எண்ணெய் பூசும்போது, தவழும் போது , எழுந்து நிற்கும் போது என்றவாறு குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டத்திலும் பாடப்படுகின்ற பாடல்களாக தந்திருப்பது வாசகர்களுக்கு சுவையாக இருக்கும் என நம்புகின்றேன்.
           தாய்முகம் பார்த்து பிள்ளை சிரிக்கத் தொடங்கும் காலத்தில் பாடப்படுவதாக பின்வரும் பாடலை ஆசிரியர் தருகின்றார்.
               இங்கு கேட்கின்ற சங்கோ இது
                 ஊர்ந்து திரிகின்ற வண்டோ
                சோறு இல்லா சோலைக் கிளியோ
                 பால் குடிக்கிற பஞ்சவர்ணக்கிளியோ
   தனது பிள்ளை பற்றி பெருமையையும்,அன்பையும்  வெளிப்படுத்தும் பாடலாக இதனை காண முடிகிறது. சங்கு என்கிற சொல் இப்பாடலில் இடம் பெறுவதால் இது ஓர் பழங்காலப் பாடலாய் இருக்கலாம் என்று ஆசிரியர் நம்புகின்றார்.
               பழைய காலத்தில் சங்கு உயர்ந்த ஒரு பொருளாகவும், செல்வமாகவும் மதிக்கப்பட்டது. அத்தகைய பெருமையைக் கொண்ட சங்கினை தனது குழந்தைக்கு அடைமொழியாக்கி தாய் மகிழ்கின்ற கோலத்தை ஆசிரியர் எடுத்து காட்டுகின்றார் .
              இது போலவே குழந்தை உடம்பைப் புரட்டுகையில் பாட்படுவதாக
                                      சின்னி தலை நோகுது நோகுது
                                      சின்னம்மா தலை நோகுது  நோகுது
                                      பப்பா தலை நோகுது நோகுது
                                       பப்பம்மா தலை நோகுது நோகுது
        என்ற பாடலை ஆசிரியர் எடுத்து காட்டியுள்ளார். குழந்தை மூன்றாம் மாதத்தை கடக்கின்ற நிலையில் உடம்பைப் புரட்டுகின்ற முயற்சியில் தலைப்பாரத்தினால் தலை நிலத்தில் அடிபடும் பொழது ஏற்படுகின்ற வலி காரணமாக குழந்தைக்கு பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடிப்பாடி தாய் குழந்தையின் தலையை வருடி பிள்ளை மீதான தனது அக்கறையையும் ,பாசத்தையும் வெளிப்படுத்துகின்றார். இப்பாடலில் வருகின்ற சின்னி,பப்பா போன்ற உறவு முறைகளுக்கான விளக்கத்தையும் திருகோணமலை சமூகத்தை அடிப்படையாக கொண்டு ஆசிரியர் தந்துள்ளார்.
             குழந்தைக்கு எண்ணெய் பூசி விடுகையில் பாடுகின்ற பாடலாக ,
                             நாய்க்கு மூக்கு இல்லை
                              நரிக்குள் மூக்கு இல்லை
                              நான் பெத்த பிள்ளைக்கு
                              மூக்கு வா மூக்கு
   என்ற பாடல் ஆசிரியரால் காட்டப்பட்டுள்ளது. தனது குழந்தையின் அழகில் , உடல் வளர்ச்சியில் அக்கறையாக இருக்கும் தாய் குழந்தையின் மூக்குத் தண்டினை எண்ணெய் தடவி உயர்த்தி விடும் போது பாடுகின்ற பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. அது போல குழந்தையின் கை கால்களை மடித்துநீட்டி எண்ணெய் பூசி இதமாக பிடித்து விடும் பொழுது
                        கை பிடிக்கிற கணக்கு பிள்ளைக்கு
                         மாதம் பத்துப்பணம் சம்பளம்
                         கால் பிடிக்கிற கணக்கு பிள்ளைக்கு
                         மாதம் பத்துப்பணம் சம்பளம்
  என்று தாய் பாடுகின்றாள் . மாதம் பத்துப்பணம் சம்பளம் கொடுக்கின்ற அளவிற்கு தனது குழந்தையின் தேக ஆரோக்கியத்தின் மீது தாய்மார் கொண்டுள்ள உயர்வான கரிசனைஇப்பாடல் மூலம் வெளிகாட்டப்படுகின்றது.
            இவ்வாறாக பல சுவையான பாடல்களையும் அர்த்தமுள்ள விளக்கங்களையும் கொண்டதாக இந்நூல் அமைந்முள்ளது. பாடல்களுக்கான விளக்கங்களோடு ஆசிரியரது கற்பனை வளமும் இழையோடிச் செல்வதை காண முடிகின்றது.
               இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் யாவும் ஒருவரால் பாடப்பட்டதுமல்ல . ஒரே காலத்தில் பாடப்பட்டதுமல்ல . அங்குமிங்குமாக வாய் வழியாக பாடப்பட்ட பாடல்களை நேரத்தியான ஒரு முறையில் ஆசிரியர் தொகுத்துள்ளார் . பாடல்களை வெறுமனே தொகுத்தது மாத்திரமல்ல அப்பால்களுக்கான பின்னணியையும், விளக்கத்தையும் அளிப்பதில் ஆசிரியர் கரிசனை செலுத்தியுள்ளது தெரிகின்றது. பாடல்களுக்கான விளக்கங்களில் மக்களின் வாழ்க்கை முறைகள், பிரதேசத்தின் வழக்காறுகள் என்பவற்றை எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பானதாகும்.
                வாசகர்கள் இரசனையோடு வாசிக்கக்கூடிய  ஒரு சிறப்பான நூலைத் தந்தமைக்காக ஆசிரியரைப் பாரட்டுகின்றேன். இது போன்ற நல்ல படைப்புகளை ஆசிரியர் தொடர்ந்தும் தரவேண்டுமென்று வேண்டுகின்றேன்.

                                                                                               சி. தண்டாயுதபாணி
                                                                                               மாகாணக் கல்வி பணிப்பாளர்

மாகாணக் கல்வித் திணைக்களம்,
கிழக்கு மாகாணம்,
திருகோணமலை,
01.04.2008