என் உரை
என் உரையை பற்றி எழுத வெளிக்கிட்டேன். இக் கவிதை எழுத்து வடிவில் வர என் புதல்வன் தான் காரணம் என்பேன்.என் சிறுவயதில் கவிதைகள் கட்டுரைகள் எழுதுவது என் பொழுது போக்கு. ஆனால் அவை மேடைக்கு வந்ததில்லை முளைத்து வந்த வேளையிலே கருகிவிடும் தன்னாலே.அதை பார்ப்பாரும் இல்லை. எனக்கு உற்சாகம் தருவாரும் இல்லை. அதனாலேயே முளையிலே கிள்ளி எறியப்பட்ட குருத்துப்போல் எனது லௌகீக கவிதை கதை எல்லாம் அகன்று போனது. நெஞ்சிலே கோர்த்து வரும் சொற்களை கொட்டிட பேனா எழுதுதாள் தேடுவேன்.கிறுக்குவேன் தமிழ்மொழியில்,படித்து பார்ப்பேன் உள் மனதில் ஒரு மௌனப் புன்னகை.பின் அந்த காகித துண்டு கீழே எங்கோ விழுந்து விடும்.இதுவே என் கவிதை எழுத்தழகு.காலங்கள் சென்றது,இல்லறவாழ்க்கை வந்தது.கோலங்கள் பல போட்டு நின்று வந்தேன் மேடையில் மகளாய் நின்ற நான்,தாரமாகி தாயாகி விதவையாகி வெளிப்பார்வைக்கு குடும்ப வாழ் மாதுவாகி நிற்கின்றேன்.உள்ளே என் குரு நாதர் சுவாமி கெங்காதரானந்த வீற்றிருந்து பாங்குடனே லௌகீக ஆசைகள் தனை களைய உதவி செய்கின்றார்.செயல்பட்டு வருகின்றேன். ஒரு நாள் (14.09.2004)வழமை போல ஒரு கவிதைதனை எழுதினேன். மௌனமாக வாசித்தேன்.நிமிர்ந்து பார்த்தேன்.என் மகன் தொழில் முடித்து வருகின்றான்.நேரமோ ஐந்து மணி வரும் போதே கூறினேன் நான் கவிதை ஒன்றை எழுதியுள்ளேன் கேட்பாயா என்றேன்.வாசியுங்கள் என்று சொன்னான்.வாசித்தேன் அத் தொடரை,மௌனமாய் கேட்டு இருந்தான் பின் முகம் மலர அம்மா இது போல் நூறு கவிதை எழுதுங்கள் நான் அச்சேற்றுகிறேன் என்றான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன் சொல்லிலே உறுதி முகத்திலே உறுதி இவை கண்ட மாத்திரத்தில் செய்வாயா நீ இதை என்றேன்.நிச்சயமாக செய்வேன் அம்மா எழுதுங்கள் என்று சொன்னான்.அன்றே நான் என் கவிதை ஒன்று மேடைக்கு வர இருக்கிறது என்றும் மகிழ்ச்சியிலே இக் கவிதை தொகுப்பினை படைத்தேன். எனது மகளும் எனக்கு எழுத்துதவி செய்தாள். அவளே கவிதைக்கு தலையங்கமும் எடுத்து தந்தாள். பிள்ளைகளின் உற்சாகப்படுத்தலினால் வந்திட்ட கவிதை இது.சொற்குற்றம் பொருள் குற்றம் எது தென்படினும் அக் குற்றத்தினை பொறுத்து இதனை வாசித்து மகிழ்ந்திடுக. கற்றோர் மத்தியில் பல்கலைக்கழக படிப்பு படிக்காதவள் நானன்றோ. அதனாலே சொற்குற்றம் பொருள் குற்றம் ஏற்படினும் அக் குற்றத்தை பெரிது படுத்தாது வாசித்தே மகழ்வுறுங்கள். காலவோட்டத்தில் இறைவன் திருவடியை சிந்திக்க முயன்றவள் அந்த இறையை பணிந்து இறையருளாளே கவிதை இயற்றினேன். அவனருளால் எல்லா நலமும் பெறும். இதில் ஒரு பாட்டு தனினும் நல்லது என்று மக்கள் குழாம் கொள்ளுமாயின் எழுதிய பயனுக்காய் மகழ்ந்திடுவேன்.இருந்தாலும் கீதை மொழி செய்திடுக பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லிடுதே அதனால் எல்லாமே இறை செயல் என்றே இருந்திடுவேன்.வாழ்க வையகம் வளர்க தமிழ் மொழி.
திருமதி. ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி

