திருமலை கோணேசர் பாடல்
திருமலை தன்னில் பரப்பிரம்மம்
மாதுமை அம்பாள் கோணேசா
அழகிய கடலே இருப்பிடமாம்
குன்றுகள் அங்கே இருப்பவையாம்
ஞானசம்மந்தர் பாடி வைத்தாரே
நான்நிலம் அதனால் வாழ்ந்ததே
சீலமிகு அந்த ஆலயமே
கடலுக்குள் புகுந்து கொண்டதுவே
மக்கள் மனதில் கவலை உடன்
காத்தே கிடந்தார் தரிசனத்தை
பின்னே வந்த குளக்கோட்டன்
இறைவன் ஆலயம் எடுத்தானே
மக்கள் வளமொடு வாழ்ந்தாரே
ஆலயம் தன்னில் வணங்கினரே
கந்தளாய் குளத்தை கட்டினனே
பூதங்களை காவல் வைத்தானே
பூவொன்று பழமொன்று வெத்திலையோடு
காவல் இருந்திட வேண்டுமென்றான்
அவையும் அதனை ஏற்றேயங்கு
காவல் இருந்து வந்தனவே
கந்தளாய் வயலும் விளைந்ததுவே
திருவிழா சிறப்புற நடந்ததுவே
மக்கள் மகிழ்ச்சி பொங்கிடவே
நாடு சீர்பெற்று எழுந்ததுவே
போத்துக்கேயர் இங்கு வந்தனரே
ஆலயம் முற்றாய் இடித்தனரே
கோட்டையை அங்கே கட்டினரே
ஆட்சியை பிடித்து வைத்தனரே
டச்சுக்காரர் இங்கு வந்தனரே
போர்த்துக்கேயர் தன்னை விரட்டினரே
ஆட்சியை தம்மிடம் வைத்தனரே
மக்கள் ஆலயம் போகா தவித்தனரே
பிரஞ்சுக்காரர் இங்கு வந்தனரே
ஒருநாள் ஆட்சி நடத்தினரே
பிரித்தானியரின் வருகையின் பின்
திருமலை அவர்வசம் போனதுவே
பிரித்தானியர் இங்கு வந்ததினால்
திருமலை தன்னை மீட்டதினால்
ஆலயம் போகா இருந்த மக்கள்
ஆலய தரிசனம் செய்தனரே
கோட்டை வாசல் கல்தன்னில்
கதையும் உண்டு கேளுங்கள்
பரம்பரை மக்கள் வாசித்த
கல்லும் சொல்லும் கதையென்ன?
"முன்னே குளக்கோட்டன் மூட்டும்
திருபணியை பின்னே பறங்கி பிடிப்பானே
பூனைககண் புகைக்கண் புலிக்கண்
பிடித்த பின் தானே வடுவாய் விடும்"
நாட்டுக்கு சுதந்திரம் வந்ததுவே
நாடியே மக்கள் வழிபட்டார்
பாடியே பக்தியாய் துதித்தனரே
துதித்து மகிழ்ந்து வந்தனரே
பின்னர் பலரும் சிந்தித்தே
ஆலயம் தன்னை வடிவமைத்தார்
பக்குவ பூசைகள் திருவிழாக்கள்
முறையே நடைபெற செய்தனரே
கோணேசர் எங்கள் கோணேசர்
மாதுமை அம்பாள் கோணேசர்
நாடியே
வந்து வணங்கியே
நற்கதி பெற்று உய்திடுவோம்.