Wednesday, February 29, 2012

சிவன் அருள்

சிவன் அருள் பெற்றோனாகில்
சிந்தையே செல்வம் ஆகும்.
கருணையே வடிவம் கொண்டு
வந்தவர் இருந்து விட்டால்
உலகமே அவரால் உய்யும்.
ஊழ்வினை மாந்தர்க்கு தொடரா?
வரும் பயன் பார்க்க மாட்டார்
மற்றது எவையும் எண்ணார்
கிடைத்ததோர் செல்வம்
என்று மக்களும் போற்றுவாரே.

Tuesday, February 28, 2012

காயம் வாக்கு மனத்தால் வாழ்ந்த ராமர்

ராமர் தம் காலால்
கல்லினை தொட்டதும் அதுவே
பெண் அணங்காய் மாறியதே
அரசன் மகனாய் பிறந்துமே
சத்திய வாழ்வை கொண்டானே
தாயிடம் கொடுத்த வாக்கினை
காக்கவே கானகம் சென்றானே
ஒருவனுக்கு ஒருத்தி என்றே
வாழ்வினை எடுத்து காட்டிடவே
சீதையைக் காட்டில் விட்டாலும்
இன்னொரு திருமணம் செய்திலனே.
தெய்வம்தானே மனித வடிவில்
உய்வழி காட்டி நின்றதுவே
மனம் வாக்கு காயமது
ஒன்றாய் இணைந்து நின்றதை
மாநில மக்கள் பார்த்தனரே
உய்யும் வழி இது
எனக் கண்டு கொண்டாரே.

Monday, February 27, 2012



மனிதன்

பறித்து உண்ட மனிதன்
பகுத்து அறிவுடனே இருக்கவில்லை
எனவே ஜீவனை வதைத்தானே
மிருகம் போலே வாழ்ந்தானே
பந்தங்கள் பலவும் வந்திடவே
நெஞ்சில் இரக்கம் பிறந்ததுவே
அன்பு சிறிது மலர்ந்ததினால்
பகிர்ந்து கொடுத்தே வாழ்ந்தானே
மனிதனாய் அவனும் உயர்ந்தானே
சிந்தனை வந்து கவ்விடவே
சுயநலம் எல்லாம் மறைந்திடவே
கருணை உணர்வுகள் மேவினவே
தியாகம் தனையே புரியலுற்றான்
தனது உணவை படைத்தானே
தன் பசி நோக்கான்
பிறர் பசி நோக்கினான்
பறித்தல் பகிர்தல் படைத்தல்
இதுவே மனிதன் செயலாகும்.

Friday, February 24, 2012

எண்ணி துதி மனமே

எண்ணி துதி மனமே
இறைவனை எண்ணி துதி -மனமே
எண்ணி துதி மனமே
இறைவனை எண்ணி துதி -மனமே

பாசங்கள் நீங்கிடவே - மனமே
எண்ணி துதி மனமே
உறவுகள் சதமில்லை - மனமே
எண்ணி துதி மனமே
பதவி புகழ் ஆசைகள் - அகன்றிட
எண்ணி துதி மனமே

எண்ணி துதி மனமே
இறைவனை எண்ணி துதி -மனமே

வாழும் வாழ்க்கை -நிலையறிந்திட
எண்ணி துதி மனமே
உடல் பற்று - அகன்றிட
எண்ணி துதி மனமே
உலக ஆசை - நீங்க
எண்ணி துதி மனமே

எண்ணி துதி மனமே
இறைவனை எண்ணி துதி -மனமே

மரண பயம் அகல
எண்ணி துதி மனமே
வைராக்கியம் மனதில் நிலைக்க
எண்ணி துதி மனமே
தவத்தின் பயன் அறிய
எண்ணி துதி மனமே

எண்ணி துதி மனமே
இறைவனை எண்ணி துதி -மனமே

தேவரை அறிந்து வாழ
எண்ணி துதி மனமே
தர்ம நிலை அறிய
எண்ணி துதி மனமே
மோட்ச நிலை அடைய
எண்ணி துதி மனமே

எண்ணி துதி மனமே - இறைவனை
எண்ணி துதி மனமே

Wednesday, February 22, 2012

பிறந்தது ஏன்

உண்ண உணவு உண்டு
உடுத்த உடை உண்டு
படித்திட நூல் உண்டு
பாரினில் வந்தது ஏன்


எல்லாம் கிடைத்திருந்தும் இறையை
நான் தேடிடவோ வந்தேன்
என் இதயத்தில் ஏக்கம்
அதை நான் உணர்கின்றேன்

சுயநலம் என்றே சொல்லிடலாமோ
தீர்த்திடவும் வழிதான் உண்டோ
அகற்றி விடத்தான் பார்க்கிறேன்
தெரியவில்லை மனதிற்கே தெரியவில்லை

முன்னோர்கள் சொன்ன படி
எதனையும் எதிர் பார்க்காமல்
கருமத்தை செய்து விட்டால்
நின்மதியும் வந்திடுமே மனத்திற்கு


பாரினிலே வந்த வேலை
எதுவெனவே உணர்ந்து கொண்டேன்
இறையன்பு கண்டு சேரவே
வந்தேன் புரிந்து கொண்டேன்


மக்கள் துயர் களைவதும்
மதலை மொழி கேட்டு
மனதினிலே மகிழ்வது தான்
இறையன்பு எனக் கொண்டேன்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
அன்பு தான் இறைவனென்று
எல்லா உயிரிலும் மேவியே உள்ளான்
அவன் எனக் கண்டுகொண்டேன்






பிறவி எடுத்த நற்பலனை
புரிந்து கொண்டேன் நான்
உயிரினத்தில் அன்பு கொண்டு
வாழ்வதே பிறவியின் தவம்

Tuesday, February 21, 2012

இயற்கை வளம்

வானம் கொடுத்த மழையாலே
துளிர்த்த பயிர் வகைகள்
காய்பிஞ்சு அதனை கொடுத்தனவே
மனிதன் உண்டு வாழ்ந்தானே

வளர்ந்து வந்த மரயினங்கள்
பழுத்து வந்த கனிகளையே
தப்பே இன்றி மனிதனுக்கு
தந்தே உதவி வந்தனவே

ளங்கன்று பசு வர்க்கம்
கன்று அருந்தும் பாலினையே
மனமாக அதுவும் விட்டதுவே
மனிதன் அருந்தி வாழ்வதற்கே

இயற்கை அளித்த கொடைகளையே
மனிதன் தானே அனுபவித்தான்
அவனால் உலகில் நன்மை
என்றும் உண்டோ சொல்வாயே




இயற்கை அள்ளி ஈயந்திடவே
மனிதன் திறனை மறைத்தானே
மனிதன் ஈயதொடங்கி விட்டால்
புவியும் சொர்க்கம் ஆகாதோ?

Monday, February 20, 2012





கவித்துவம்



எண்ணத்தில் மேன்மை வேண்டும்
எழுத்தினில் நலலோசை வேண்டும்
சொற்களில் ஆட்சி வேண்டும்
சுவையான கவிதை வேண்டும்
சாற்றியே நின்றால் இங்கு
கல்லும் கசிந்தே வரும்.

பாக்களில் இனிமை வேண்டும்
பதங்களில் பொருளும் வேண்டும்
ஏற்றம் மிகு தொடர்களாக
எழுதியே எடுத்து வி்ட்டால்
நாட்டமிகு கவிதை எல்லாம்
ஞாலத்தில் எட்டும் சுவையாய்.

அன்பு சேர் சொற்களாலே
அமிழ் தான இசையினோடு
இறைவனை தன்னைப் பூஜித்தால்
மயங்கிய பொறிகள் எல்லாம்
மயக்கமே தீர்த்து நின்று
வந்தவேலையை செய்யும் அன்றோ.

Thursday, February 16, 2012

வேலன்

பச்சை மயில் வாகனனே
அச்சமாய் உனை கூவ
இச்சையுடன் வந்த வேலவா
அரோகரா வேலா அரோகரா
அரோகரா வேலா அரோகரா


வள்ளி மண வாளனே
வறுமைதனை நீக்கி வைத்தாய்
வல்லமையை தந்தாய் வேலவா
அரோகரா வேலா அரோகரா
அரோகரா வேலா அரோகரா


கதிர்காம கந்தனே
கர்ம வினை தீர்ப்பவனே
கதிரமலை வேலவா
அரோகரா வேலா அரோகரா
அரோகரா வேலா அரோகரா


முத்துக் குமரனே
முதுமையிலே காப்பவனே
முந்துசிவன் மைந்தனே வேலவா
அரோகரா வேலா அரோகரா
அரோகரா வேலா அரோகரா


ஞான வேல் கந்தனே
ஞான மதை தந்தவனே
ஞானமுடன் வாழவழி வைத்தவனே
அரோகரா வேலா அரோகரா
அரோகரா வேலா அரோகரா

Wednesday, February 15, 2012

மாணிக்கவாசகர்

சற்குருவாய் சிவனை ஏற்று ஞாலத்தில்
சிவனிடமே தீட்சை பெற்று வாழ்ந்து
மந்திரி பதவி தனையே துறந்து
அற்புத மாணிக்கவாசகா உன்தாள் போற்றி.


மூலமதில் நரியையே பரியாக்கி வைத்து
வைகை நதிதனை பெருக வைத்து
புட்டுக்குமண் சுமந்த சிவனாரை குருவாயேற்ற
அற்புத மாணிக்கவாசகா உன்தாள் போற்றி.


திருக்கோவை தனைச் சொல்ல
எழுத்தானி கொண்டு சிவனார்அதையெழுத
படிக்கவந்த தில்லைவாழந்தணர் திகைக்க வைத்த
அற்புத மாணிக்கவாசகா உன்தாள் போற்றி.


மணிவாசகம் கூறி மணிவாசகரான மந்திரியார்
மனதிலே ராஜயோகமதை ஏற்றே வாழ்ந்தார்
இறைகோவில் புகுந்து மறைந்தே அருளிய
அற்புத மாணிக்கவாசகா உன்தாள் போற்றி.

Tuesday, February 14, 2012

சுந்தர மூர்த்தி நாயனார்


தோழமையாக வந்த சிவனையே ஏற்று
சித்தனாம் சிவனை அன்று பித்தனே எனக்கூறி
அடிமை ஏட்டினை கிழித்த பித்தாஎன பாட்டிசைத்த
பெம்மான் சுந்தரா உன்தாள் போற்றி


பறவையாரினூடலை சிவனையே தூதனுப்பி தீர்த்தாய்
கொடுத்த வாக்கினைமீறியே விழிகள் இழந்து நீ
ஆலயத்தில் பாட்டிசைத்து விழிகளைப் திரும்பப் பெற்றாய்
பெம்மான் சுந்தரா உன்தாள் போற்றி


இல்வாழ்க்கை வாழவே சிவனிடம் பொன்கேட்டே
ஆற்றிலே போட்டதை குளத்திலே எடுத்தாய்
சேரமான்தன்னோடு கையிலைக்கு கூட்டோடு ஏகிய
பெம்மான் சுந்தரா உன்தாள் போற்றி


இல்லற போகமதில் வாழ்ந்து வந்த நீ
பொங்குமானந்தம் கொண்டு சிவனையே பாடி
ஞானமே வாழ்கையென நழுவிடாமல் பிடித்த
ஞானயோகியான சுந்தரா உன்தாள் போற்றி.

Monday, February 13, 2012




திருநாவுக்கரசு நாயனார்



ஈசனிடம் கைகட்டி சேவகனாய் தாள்பணிந்து
நாளும் பண்ணமைத்து பாட்டிசைத்து நின்று
உழவாரம் கொண்டு ஆலயம்சுற்றி புல் செருக்கிய
நாவிற்கு அரசனான அப்பரே உன்தாள்போற்றி


தந்தையாய் மறையவே தமக்கையால் வளர்க்கப்பட்டு
சமணமதம் மாறி சைவமதம் உயிர்பெறவே
சிவனார்க்கு பாட்டிசைத்து கருணை பெற்ற
நாவிற்கு அரசனான அப்பரே உன்தாள்போற்றி


மதயானை கொன்றிடாமல் சிவனுக்கு பாமாலைசூடி
சுண்ணாம்புக்காள்வாயில் இட்டபோதும் சிவபாட்டால் மீண்டு
கல்லுடன் கட்டி கடலிலே விட்டபோதும் அவனாமத்தால் மீண்ட
நாவுக்கோர் அரசனான அப்பரே உன்தாள்போற்றி




ஐந்தெழுத்தோதி அரியபல புதுமை செய்து
கர்மயோகமே வாழ்க்கையென உணர வைத்து
உழவாரம்தனை ஏந்தி கர்மயோகியாய் வாழ்ந்த
நாவிற்கோர் அரசனான அப்பரே உன்தாள்போற்றி

Friday, February 10, 2012

திருஞான சம்பந்த நாயனார்
சற்புத்திரனாய் உதித்து சைவ மணங்கமிழ
சிவகாமி சுந்தரி தன் திருமுலைப்பாலுண்டு
தந்தைக்கு விடையாய் தோடுடைய செவியன்
என்றேயுரைத்த சம்மந்தர் தாள் போற்றி

திருபொற்தாளம் பெற்று சிவிகைதனிலே ஏறி
திக்குதோறும் சென்று திருத்தலம் வணங்கி வந்து
மூடிய இறைகதவை பாட்டினால் திறந்த
நாவுகரசரோ டிணைந்து பாடிய
ஞான சம்மந்தர் தாள் போற்றி

பாண்டியராஜன் தன் கூன்முதுகு நிமிர்த்தி
மங்கையர்க்கரசிதனை பாடலால் சிறக்க வைத்து
கிரகதோஷம் தனை நீக்கவே பாட்டிசைத்து
சமணர்தமைவென்ற ஞானசம்மந்தர் தாள் போற்றி


சிவனருளினால் உதித்து சிவகாமி புத்திரனாய் பேறுபெற்று
சிறுவனாயிருந்தும் வாழ்வில் சிவனையே வணங்கி
பக்தியோகம் தன்னையே மாந்தர்க்கு எடுத்துக்காட்டி
முத்தியில் பொலிவு தோன்ற ஜோதியில் கலந்தாய் போற்றி.

Thursday, February 9, 2012

மனிதருள் மாணிக்கம்
பொறிகளை அடக்கியாளும்
வல்லமை படைத்தோனாகில்
சகலவே சக்தி வந்து அவனுள் பாயும்
உலகத்தின் இயக்கம் தன்னை
ஒரு பொழுதும் உணரான்
கருமமே கண்ணாய் நின்று
தன் கடமை செய்வான்
அவனியில் அவனைப்பார்த்து
தக்கோனே இவன் என்று உணர்வார்
மனிதருள் மாணிக்கமாய்
அவனும் தான் வருவான் அன்றோ.


(ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பின் கோமன்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்))

Wednesday, February 8, 2012

கிருஷ்ணா



கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கிருபை புரிந்தே ஆளும் கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா



கோகுலத்தில் வாசம் செய்தே
கோபியர் தம்மை மயங்க வைத்தாய்
ஆயர் பாடி கிருஷ்ணா உன்னை
அனு தினமும் பூஜிப்பேனே

(கிருஷ்ணா)


குசேலரிடம் அவலை உண்டு
குபேரனாய் ஆக்கி வைத்தாய்
ருக்மணியை மணந்தே நீயும்
தெய்வீக அன்பை புரிய வைத்தாய்
(கிருஷ்ணா)




அண்ட சராசரங்கள் குலுங்க வைத்து
அவணியில் போரினை துவக்கி வைத்தாய்
குருஸேத்திரத்தில் கீதையை உரைத்தே
சுயதர்மம் அதை நீ விளங்க வைத்தாய்
(கிருஷ்ணா)

Tuesday, February 7, 2012

கேள்வி பதில்

தவமான வாழ்க்கைக்கு
எது வேண்டுமோ?
ஈசன் திருநாமாம் செப்புகின்ற
நிலை வேண்டுமே.
பல வினைகள் தீர்வதற்கு
வழி தானுண்டோ?
சிவன் மலர் பாதம்
அடையும் நிலை வேண்டுமே.
ஐந்தெழுத்து ஓதி நின்றால்
நிலை என்னவோ?
அகம் மலர்ந்து வாழ்வின்
நிலை உயருமே.
விபூதி தனை நாம்
அணிவது ஏனோ?
நிலையில்லா வாழ்வு
என்று நினைப்பதற்கே
பல நூறு கேள்விகளுக்கும்
விடை தான் உண்டு
படித்தே அதனை நீ
தெரிந்தே கொள்வாயே.

Monday, February 6, 2012

ஆத்ம பலம்



சீர் பெருகும் ஆத்ம பலம்
சிந்தனையிலே நிறைந்துவிடும்
தாவுகின்ற குரங்குமனம்
தன்னாலே அடங்கிவிடும்
மேவுகின்ற நல்லெண்ணம்
நெஞ்சினிலே அமரும்
செயலது செய்கின்ர்
சக்தியே கூடிவிடும்
அளப்பரிய உயர்நோக்கம்
அண்மித்தே வந்துவிடும்
தனக்குரிய கடமைகளை
எளிதாக செய்திடுவார்
தியானமதில் இருந்திடவே
இவையெல்லாம் வந்திடுமே.

Sunday, February 5, 2012

ஆத்ம கீதம்
திக்கெட்டும் முழங்கட்டும்
திசையெங்கும் பரவட்டும்
ஆத்மகீதம் அதனை
அனைப்பவர் யாருண்டோ
இல்லங்கள் தோறும்
இளையவர் கிளம்பட்டும்
ஈன்றவர் அதனை
உடன்பார்த்து மகிழட்டும்
ஏழைகள் நெஞ்சம்
அதனாலே குளிரட்டும்
சிறுவர்கள் திடம்கொண்டு
சிந்தை மகிழட்டும்
கன்னியர் அடக்குமுறை
கட்டோடு தீரட்டும்
வீரம் முழங்கி
விண்ணுலகம் பரவட்டும்
ஞானிகள் வரத்தை
கொடுத்தே மகிழட்டும்
எங்கும் சாந்தி
எதிலும் சாந்தி
பொங்கும் சாந்தி
புதுமணம் கமழ

Saturday, February 4, 2012

ஞானம்

புண்ணியம் தன்னில் பிறந்த ஞானம்
புணர்ஜென்மம் எடுத்து அருளது ஈனும்.
புதுமை அதனில் பொங்கிய ஞானம்
சேவைகள் செய்து ஜெகத்தினை வளர்க்கும்.
சிறுவர் தமக்குள் அரும்பிய ஞானம்
பெருத்தே வளர்ந்து பெருங்கதை புகழும்.
உழைப்பவர் தமக்குள் உயரிய ஞானம்
ஓங்கியே வளர்ந்து உயர்வினை ஈனும்.
அடக்கு முறைக்குள் அடங்கா ஞானம்
தத்துவம் பேசி நித்தமும் வளரும்.
யோகிகள் தமக்குள் தோன்றிய ஞானம்
பூதலம் எங்கும் விரிந்தே சென்று
மன நிறைவான வாழ்வினை தந்திடும்
அருமை சுவைகள் அதனில் கிளம்பிடும்
திரும்பிய பக்கம் எதிலும் ஞானம்
மக்கள் எல்லாம் விழிப்புடன் வாழ்வர்
கலியுகம் இது அதனால் போகும்
சக்திய யுகம் தன்னால் வந்திடும்.

Friday, February 3, 2012





(இக்கவிதை மட்டகளப்பில் காயத்திரி அம்மன் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் நடைபெற்ற அன்று நெஞ்சிலே கூடிய கவிதை.கவிதை எழுதிய பின்னர்தான் காயத்திரி அம்பாளின் கும்பாபிஷேகம் நடைபெற்றது தெரிந்தது.)
ஞானத்திருவிழா



ஞானத்திருவிழா இது ஓர் ஞானத்திருவிழா
மக்கள் கூட்டம் நிறைந்திட்ட ஞானத்திருவிழா
மாவிலை தோரணம் தான் கட்டி
மணம் உள்ள மலரால் அலங்கரித்து
யாக குண்டங்கள் விதிப்படி அமைத்த

(ஞானத்திருவிழா)

பக்தர்கள் அங்கு வந்து கூடினரே
தம்மை மறந்தே வணங்கி நின்றனரே
எப்படி தம்மை திருத்திக் கொண்டு
வாழ்க்கை நடத்தலாம் என்றே எண்ணினரே



(ஞானத்திருவிழா)

அத்தனை சக்தி நிறைந்து இருந்ததுவே
ஞானவெளி பின்னி படர்ந்து ஒளிர்ந்ததுவே
செந்தழல் வேள்வியின் புகை மண்டலம்
ஆகாயம் எங்கும் விரிந்து பரந்ததுவே

(ஞானத்திருவிழா)

சாத்வீகம் அங்கு நிரம்பி வழிந்ததுவே
மக்கள் தீய எண்ணம் அழிந்து ஒழிந்ததுவே
ஆத்மீகம் அங்கு உயர்ந்து நின்றதுவே
அரிய சேவைக்கு இடமாய் முளைத்ததுவே

(ஞானத்திருவிழா)

Thursday, February 2, 2012

பிரணவம்

ஓம் என்னும்
எழுத்தின் ஓசையை
கேட்டே எழுந்தேன்.
அற்புத வடிவில்
ஆனைமுகன் கண்டேன்.
அருந்தமிழ் ஓசை
ஒலிக்கவே கேட்டேன்.
சிலம்புகள் முழக்கம்
வந்ததே திக்கால்.
தரணியில் ஆனந்தம்
பொங்கவே கண்டேன்.
ஓமெனும் பிரணவ
வடிவத்தின் பொருளை
விளம்பவே நானும்
வியப்பில் ஆழ்ந்தேன்.

Wednesday, February 1, 2012

ஞான யோகம்

எல்லாமே இறை மயமானவுடன்
நெஞ்சிலே இருப்பது என்ன?
வாழ்வு வளம் இறைசெல்வமன்றோ
அதுவும் இறை மயமானதில்
எஞ்சி இருப்பது என்ன?
உள்ளமே அற்றபின் சிந்தனையேது?
செயலெல்லாமே இறை மயம்
காய்ந்து உலர்ந்த சருகுபோல
இருந்திருவார் அவர் என்றும்
நானும் நீயும் சிவமாக
அதுவும் சிவமாக காட்சியும்யளித்திடுமே
எல்லாமே சிவன் தானேயவர்க்கு